உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜல்லிபட்டி ஜி.எச்.,ல் மக்களுக்கு தேவையான... வசதிகளை மேம்படுத்தணும்!கிடப்பில் போடப்பட்ட நீண்ட கால கோரிக்கை

ஜல்லிபட்டி ஜி.எச்.,ல் மக்களுக்கு தேவையான... வசதிகளை மேம்படுத்தணும்!கிடப்பில் போடப்பட்ட நீண்ட கால கோரிக்கை

உடுமலை:உடுமலை அருகே, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மலைவாழ் கிராமத்தினர் மருத்துவ தேவைக்கு நம்பியுள்ள, ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையை, தரம் உயர்த்தி, வசதிகளை அதிகரிக்க வேண்டும்.உடுமலை அருகே ஜல்லிபட்டியில், கிராமத்தை சேர்ந்தவர்களால், நிலம் தானமாக வழங்கப்பட்டு, அரசு மருத்துவமனை, 1955ல், துவக்கப்பட்டது.உடுமலை வனச்சரகம், ஈசல்திட்டு உட்பட மலைவாழ் கிராம மக்களும், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினரும் மருத்துவ தேவைக்காக இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனர்.நாள்தோறும், 300க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

பணியில் 2 டாக்டர்கள்

தற்போது, இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.வனப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக பல்வேறு இடையூறுகளை தாண்டி, ஈசல்திட்டு உட்பட மலைவாழ் கிராம மக்கள், ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். மருத்துவமனையில் தற்போது, 12 படுக்கை வசதி மட்டுமே உள்ளது.இதனால், காய்ச்சல் பாதிப்பு போன்ற நோய்த்தாக்குதல் அதிகம் இருக்கும் நேரங்களில் படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் பாதிக்கின்றனர். உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒதுக்கீடும், இம்மருத்துவமனைக்கு இதுவரை வழங்கப்படவில்லை. போதிய வசதிகளில்லாததால், அப்பகுதியை சேர்ந்த மக்கள், உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டியுள்ளது.அரசு மருத்துவமனையாக இருந்தாலும், மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஜல்லிபட்டியில் இல்லை. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பிரசவத்துக்காக வருபவர்கள், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மலைவாழ் கிராமங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகள் தேவைக்காக, மகப்பேறு பிரிவு துவக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகள், உடுமலைக்கு, 30 கி.மீ.,க்கும் அதிகமாக பயணிக்க வேண்டியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவும் இல்லை.விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில், பாம்பு கடித்தல் போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவோர், வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. விபத்து போன்ற அவசர கால சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

புது குடியிருப்பு கட்டணும்

ஜல்லிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டடம் இருந்தது. போதிய பராமரிப்பு இல்லாத கட்டடம், பொதுப்பணித்துறையால் இடித்து அகற்றப்பட்டது.அதன்பின், புது கட்டடம் இதுவரை கட்டப்படவில்லை. இதனால், டாக்டர்களும், செவிலியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இடவசதி இருந்தும், கட்டடம் கட்டப்படாமல், பல ஆண்டுகளாக இழுபறி நீடிக்கிறது.இம்மருத்துவமனையில், படுக்கை வசதிகளை அதிகரித்து, அவசர சிகிச்சை, மகப்பேறு, ரத்த பரிசோதனை ஆய்வகம், எக்ஸ்ரே, ஸ்கேன், குழந்தைகள் மருத்துவம் உட்பட பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். கூடுதலாக டாக்டர்களை நியமித்து, 24 மணி நேர சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்.கிராமிய மருத்துவமனை பிரிவில் இருந்து தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராமத்தினரும், மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.இது குறித்து, அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள தொடர் கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர். சுற்றுப்பகுதி கிராமங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கான தேவை குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை