உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை உருவாரங்கள் தயாரிப்பு தீவிரம்: விற்பனைக்கு உதவ எதிர்பார்ப்பு 

கால்நடை உருவாரங்கள் தயாரிப்பு தீவிரம்: விற்பனைக்கு உதவ எதிர்பார்ப்பு 

உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்காக, மண் உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பால் மற்றும் கால்நடை வளம் பெருகவும், கோவிலில், பொங்கலன்று திருவிழா நடக்கும்.இந்த திருவிழாவில், ஆடு, மாடு, எருமை, காளை, நாய் போன்ற கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படாமல் இருக்க, அவற்றின் மண் உருவ பொம்மைகளை கோவிலில் வைத்து வழிபடுவது சிறப்பம்சமாகும்.பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும், திருவிழாவிற்கான உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி, தற்போது தீவிரமடைந்துள்ளது.உடுமலை பகுதியிலுள்ள, கோட்டமங்கலம், புக்குளம், மரிக்கந்தை உட்பட கிராமங்களில், உருவார பொம்மைகள் தயாரிப்பதில், பாரம்பரியமாக பல்வேறு குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.களிமண்ணுடன், குதிரை சாணம் மற்றும் கம்பு தவிடு கலந்து இப்பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. நுணுக்கம் மிகுந்த இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டு, வர்ணம் பூச ஒரு வார காலம் பிடிக்கிறது.ஆண்டுக்கு ஒரு சீசனில் மட்டுமே, இந்த பொம்மைகளை தயாரிப்பதால், போதிய வருவாய் இல்லாமல், இக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பாரம்பரியத்தை கைவிடக்கூடாது என்ற வைராக்கியத்தால், இன்றும், உருவார பொம்மைகளை தயாரித்து, பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் விற்பனை செய்து வருகின்றனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'மண் பொம்மைகள் உற்பத்திக்கு, தேவையான மண்ணை குளத்திலிருந்து எடுக்க முடிவதில்லை. இதனால், தனியார் நிலங்களில் அதிக விலை கொடுத்து, மண் வாங்குகிறோம். ஈரப்பதத்துடன் உள்ள பொம்மையை சூடுபடுத்த, தேங்காய் மட்டை தேவைப்படுகிறது. இவ்வாறு, பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பொம்மை தயாரித்து விற்பனை செய்கிறோம். ஆல்கொண்டமால் கோவிலில், எவ்வித கட்டணமும் இல்லாமல், உருவார பொம்மைகள் விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை