உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விரைவில் போலீசார் கூண்டோடு மாற்றம்

 விரைவில் போலீசார் கூண்டோடு மாற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளை கடந்து ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி, தனி ராஜ்ஜியம் நடத்தி வரும் போலீசாரின் பட்டியல்கள் மும்முரமாக தயாராகி வருகிறது. திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லை, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் மற்றும் உடுமலை என, ஐந்து சப்-டிவிஷன்களை உள்ளடக்கியது. போலீஸ் பற்றாக்குறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு போலீசார் சிலர், 'வேலை செய்யும்' போர்வையில் மேலதிகாரிகள் தயவில் வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றப்படாமல் ஒரே ஸ்டேஷனில் 'தனி ராஜ்ஜியம்' நடத்தி வருகின்றனர். ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் தங்களுக்கு ஏதாவது ஆதாயத்தை தேடி கொள்கின்றனர். சிலர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்துக்கு தெரியாமல் லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் வாயிலாக பணம் மழையில் நனைகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் போலீசாரின் விபரம்; மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் புகார்களில் சிக்கியவர்கள் என, தனித்தனியாக பட்டியல் விபரங்களை தயாரித்து கொடுக்குமாறு எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் அறிவுறுத்தி யுள்ளார். சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மதுவிலக்கு, போக்குவரத்து மற்றும் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் என, தனித்தனி பட்டியல் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக, சட்டம்-ஒழுங்கு போலீசாரின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஒரே சப்-டிவிஷன், ஸ்டேஷன்களில் பணிபுரிபவர்கள், புகார்களுக்குள் சிக்கியவர்கள் என விபரம் சேகரிக்கப்படுகிறது. இப்பணி முழுமையாக முடிந்த பின், அடுத்த வாரத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மாநகரில் எப்போது? திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மூன்றாண்டுகளை கடந்த போலீசார் ஏராளமானவர் உள்ளனர். இவர்கள் தற்போது வரை இடமாற்றம் செய்யப்படாமல் ஸ்டேஷனில் தொடர்ந்து வருகின்றனர். மாவட்டத்தை போன்று, மாநகரிலும் விபரங்களை சேகரித்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி