திருப்பூர் : 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி, மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச் செல்வம், அம்மொழியை மேலும் வளமானதாக, வனப்புமிக்கதாக மாற்றுகிறது.கிணற்று தவளையாய் ஒரு மொழி, ஓரிடம் என முடங்கிக் கிடக்காமல், வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியை புரிந்துக் கொண்டு அதனை நமது மொழிக்குள் கொண்டு வருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான வாய்ப்பை ஏற்படுத்தும் போது, கலாசார வளர்ச்சியில் பிணைப்பு ஏற்படுத்த முடியும் என்பதே பாரதியின் பாடல் வரிகள் உணர்த்தும் உண்மை. எழுத்துக்கலையை பொறுத்தவரை இந்த வெளியுலக பரிமாற்றத்தை, மொழி பெயர்ப்புகள் செய்து வருகின்றன.இத்தகைய வாய்ப்பை, சமீபத்தில், சென்னையில் மாநில அரசு நடத்திய, சர்வதேசப் புத்தக கண்காட்சி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏராளமான எழுத்தாளர்கள், அவர்களை எழுதிய புத்தங்களை இனங்கண்டு, அவற்றின் குணம் கண்டு, மாற்று மொழியில், மொழி பெயர்ப்பதற்கென்றே, எழுத்தின் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோரை, பயிற்சி வழங்கி நியமித்திருக்கிறது அரசு. தேர்வான புத்தகங்கள்
அந்த வகையில், உலகின், 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் சிலவற்றை, மொழி பெயர்ப்புக்கென தேர்வு செய்துள்ளனர். ஒடியா, அரபி, மராத்தி, மலையாளம், துருக்கி, மலாய் என, பல்வேறு மொழிகளில், தமிழ்ப்புத்தகங்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட உள்ளன. அதற்கான 'ராயல்டி'யுடன் கூடிய ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது.திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய, ஏழு புத்தகங்கள் பிற மொழியில் மொழி பெயர்ப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. வாசகர்களிடம் ஆர்வம்
அவர் கூறியதாவது: சமீபகாலமாக மொழி பெயர்ப்பு நுால்களுக்கு, வாசகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது; அந்த வகையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், பிற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்படுவதென்பது, வரவேற்கதக்கது; இவ்விஷயத்தில், மாநில அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. இதன் வாயிலாக, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், அவற்றில் இடம் பெற்றுள்ள நம் பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்ட விஷயங்களை பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மக்கள் அறிந்துக் கொள்ள முடியும்; உணர்ந்துக் கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.