| ADDED : ஜன 06, 2024 11:13 PM
திருப்பூர்;'காங்கயம் காளை சிலை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும்' என ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, மக்களின் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், காங்கயம் காளை சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு அருகேயுள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, போலீசாரின் உதவியுடன் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், காங்கயம் அகிலாண்டபுரம் பள்ளி அருகே உள்ள கடையில், போதை பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.ஒன்றியக்குழு துணை தலைவர் ஜவஹர், முன்னிலை வகித்தார்.பி.டி.ஓ.,.க்கள் விமலா தேவி, ஹரிஹரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ஒன்றிய கவுன்சிலர்கள், பிற துறை அலுவலர் பலரும் பங்கேற்றனர்.