கோவில் நிலத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு: வாகனங்களை சிறைப்பிடித்த பொதுமக்கள்
பல்லடம்: பல்லடம் அருகே கரைப்புதுாரில், குப்பை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்கள் முன், இச்சிப்பட்டி கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, குப்பை வாகனங்கள் திரும்பிச் சென்றன. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, கிராமப் பகுதிகளில் குப்பைகள் கொட்ட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று, கரைப்புதுார் ஊராட்சி எல்லைப் பகுதியில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்டன. அருகில் இருந்த விவசாயிகள் பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்தனர். அப்பகுதியினர் கூறியதாவது: கரிய காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்த இடம், திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டு பகுதியில் உள்ளது. மாநகராட்சி குப்பைகள் கோவில் நிலத்தில் கொட்டப்பட்டன. விவசாய தொழில் நிறைந்த பகுதியில், கோவில் நிலம் என்பதும் தெரியாமல், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக உள்ளது. இதில், குப்பைகள் கொட்டும்போது, கால்நடைகள் அவற்றை தெரியாமல் உண்டு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைகள், கழிவுகளால் ஈக்கள் தொல்லை அதிகரிக்கும். மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் ஒருவர்தான், இங்கு குப்பைகள் கொட்ட அனுமதித்துள்ளார் என்று தெரியவந்தது. அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, அனுமதி பெற்று தான் குப்பைகள் கொட்டப்படுகிறது. யாரேனும் வாகனங்களை தடுத்தால் போலீசில் புகார் அளிப்போம் என்று மிரட்டுகிறார். மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டதற்கு, இது குறித்து பரிசீலிப்பதாக கூறுகிறார். என்ன ஆனாலும் சரி; குப்பைகள் கொட்ட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து, மூன்று வாகனங்கள் குப்பை கொட்டாமல் திரும்பிச் சென்றன. குப்பை கொட்டிய ஒரு வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்த திருப்பூர் மாநகர போலீசார் அங்கு வந்தனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அனுமதி இல்லாமல் இங்கு எதற்கு வந்து குப்பை கொட்டுகிறீர்கள் என்று மாநகராட்சி ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கொட்டிய குப்பைகளை திருப்பி எடுத்துச் செல்லுங்கள் என்றனர். கோவில் நிலத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் திருப்பி அள்ளப்பட்டு அதே வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது. இதனால், கரைப்புதுார் ஊராட்சி எல்லையில் பரபரப்பு நிலவியது. போலீசுக்கு எல்லை குழப்பம் குப்பைகள் கொட்டப்பட்ட இடம் கரைப்புதுார் ஊராட்சி மற்றும் இடுவாய் ஊராட்சி எல்லையிலும் உள்ளது. இது, திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்டதா அல்லது பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டதா என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது. நீண்ட நேரம் குழப்பத்துக்கு பின், வேறு வழியின்றி, மாநகர போலீசாரே, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தினர்.