உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க பரிந்துரை

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க பரிந்துரை

உடுமலை:உடுமலை அருகே, அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு நீர் திறக்க, அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, உயிர்த்தண்ணீர் மட்டும், மூன்று முறை திறக்கப்பட்டது. அரசு உத்தரவு அடிப்படையில், கடந்த டிச.,31 வரை நீர் வழங்கப்பட்டது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த, 9ம் தேதி அணை நிரம்பியது. கடந்த, 12 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும், என வலியுறுத்தினர்.அதன் அடிப்படையில், திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, சுற்றுக்கள் அடிப்படையில், அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்க அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை அறிக்கை அனுப்பி யுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இரு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில், பிப்., 1 முதல் மார்ச் 31 வரை, இரு மாதங்களுக்கு, சுற்றுக்கள் அடிப்படையில், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு கிடைத்ததும், அமராவதி அணையில் இருந்து நீர் திறக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி