| ADDED : பிப் 10, 2024 12:40 AM
பல்லடம்;பல்லடம் நகராட்சி, சின்ன வடுகபாளையம் குட்டை, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.50 கோடி ரூபாய் மதிப் பில் புனரமைக்கப்பட்டது.குட்டை முழுவதுமாக துார்வாரப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பயன்பாட்டுக்கு விடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில், மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.பொதுமக்கள் கூறியதாவது:நீராதார குட்டை துார்வாருவது வரவேற்கத்தக்கது. ஆனால், வெறும், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக, 3.50 கோடி ரூபாய் வீணாக்கியது ஏற்புடையதல்ல. இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில், குட்டையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்.நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் இருக்கைகள் அமைப்பதுடன், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அமைக்க வேண்டும். எனவேதான், வெறும் நடைபயிற்சிக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு பூங்காவாகவும் இது பயன்படும். எனவே, நடைப்பயிற்சி பாதையை பராமரித்து, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பல்லடம் நகராட்சி பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு பொழுதுபோக்கு பூங்காக்கள் கிடையாது. தனியார் வாயிலாக பராமரிக்கப்படும் வனாலயம் பூங்கா நகரப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.எனவே, 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட குட்டையை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப மேம்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.