விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஏற்படும் விபத்துக்கு, அலட்சியமே காரணமாக இருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவோரின் துன்பத்தை யாராலும், எந்தக்காலத்திலும் போக்க முடியாது. ஆனால், கவனமாக இருந்தால், விபத்தை தவிர்க்கலாம். கடந்த 2020 பிப்., 20ம் தேதி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கேரள அரசு பஸ் மீது, கன்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில், 19 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்துக்கு முக்கியமான காரணம், கன்டெய்னர் லாரி கொச்சியில் இருந்து புறப்பட்டு, பெங்களூருவுக்கு வேகமாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், லாரி டிரைவர் ஓய்வின்றி இயக்கியுள்ளார்.அப்போது, துாக்க கலக்கத்தில், மையத்தடுப்பின் மீது லாரி ஏற்றியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்து, 19 உயிர்களை பலிவாங்க காரணமாக அமைந்தது. கடந்த, 14ம் தேதி, திருப்பூரில் இருந்து சேலம் மேட்டூருக்கு செல்ல, ஒன்றரை வயது மகனுடன் டூவீலரில் தம்பதி சென்றனர்.அப்போது, ஊத்துக்குளி - புலவர்பாளையம் அருகே, திருப்பூர் நோக்கி வந்த கார், டூவீலர் மீது மோதியும், அங்கிருந்த நுால் மில்லுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த, மூன்று வயது குழந்தை மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த கோர விபத்தில், தம்பதி, விளையாடி கொண்டிருந்த குழந்தை, காரை ஓட்டியவர் என, நான்கு பேர் இறந்தனர். விபத்துக்கு காரணம், காரில் வந்த, மூன்று பேரும் மது போதையில் வாகனத்தை ஓட்டியது தெரிந்தது. மொபைல் போன்டிரைவிங் வேண்டாம்
திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கூறியதாவது:டூவீலரில் பயணம் மேற்கொள்ளும், இருவருமே கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும். டூவீலரில் செல்பவர்கள், திடீரென எவ்வித சிக்னலும் மேற்கொள்ளாமல், வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் திரும்ப முயற்சிக்கும் போது பின் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எக்காரணத்தை கொண்டு வாகனங்களை இயக்க கூடாது, குடும்பத்தினரும் அதனை அனுமதிக்க கூடாது.மதுபோதையில் ஓட்டுவது, மொபைல் போன் டிரைவிங் போன்றவற்றை கட்டாயம் செய்ய கூடாது.பயணம் என்பது, பாதுகாப்பகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அது, சோகத்தை ஏற்படுத்திட கூடாது.