விளையாட்டு ஆடை உற்பத்தி தயார் நிலையில் திட்ட அறிக்கை
திருப்பூர், : தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில், விளையாட்டு ஆடை உற்பத்தி தொடர்பாக, விரிவான அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.உலக ஜவுளி வர்த்தகத்தில், தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது, 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்' எனும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி, விளையாட்டு ஆடைகள், 'ஆக்டிவ் வேர்' எனப்படும் உடற்பயிற்சி ஆடைகள், பொறியியல் துறை ஆடைகள், முப்படை வீரர்களுக்கான சீருடைகள் என, 12 வகையான பிரிவுகளை கொண்டுள்ளது.ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில், தொழில்நுட்ப ஜவுளி குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தி வருகிறது; குறிப்பாக, உலகம் முழுவதும், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு ஆடை வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளது.தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதி, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாற, விளையாட்டு ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் மேம்பட வேண்டுமென, இந்திய தொழிற்கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,), மாநில ஜவுளிப்பிரிவு அறிவுறுத்தியது.சி.ஐ.ஐ., பரிந்துரையை ஏற்று, தமிழக ஜவுளித்துறை அமைச்சகம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்தது. அதனடிப்படையில், தனியார் ஆய்வு நிறுவனம் வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.அரசிடம், திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசிடம் இருந்து இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:தமிழக ஜவுளிஏற்றுமதியில், திருப்பூர் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. பின்னலாடை தயாரிக்கும் தொழிற்சாலைகள், கலப்பு நுாலிழை மற்றும் செயற்கை நுாலிழைகளை கொண்டு, விளையாட்டு ஆடை உற்பத்தி செய்ய, முழு வீச்சில் தயாராகி வருகின்றன.விளையாட்டு ஆடை உற்பத்தி கைவசமாகும் போது, ஏற்றுமதி வர்த்தகம் கணிசமாக உயரும். இந்திய தொழிற்கூட்டமைப்பு பரிந்துரைத்தபடி, தமிழக ஜவுளித்துறையும், இதுதொடர்பான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. கோவையில் நடக்க உள்ள கருத்தரங்கில், தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.