உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குவதில் இழுபறி; கரும்பு விவசாயிகள் அதிருப்தி 

 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குவதில் இழுபறி; கரும்பு விவசாயிகள் அதிருப்தி 

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தில் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1960ம் ஆண்டு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது. திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். நாள் ஒன்றுக்கு, 2 ஆயிரம் டன் கரும்பு அரவை திறன், அதிக பிழிதிறன், துணை நிறுவனமாக எரிசாராயம், எத்தனால் உற்பத்தி ஆலை சிறப்பு வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வந்தது. சர்க்கரை ஆலையின் இயந்திரங்கள் பழமையானதாகவும், பராமரிப்பு இல்லாததாலும், அரவை பாதித்த நிலையில், கடந்த 2023 முதல் ஆலை இயங்காமல் முடங்கியுள்ளது.ஆலை இயந்திரங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆக.,11ம் தேதி, உடுமலை வந்த தமிழக முதல்வர், ஆலையை புனரமைத்து, மீண்டும் இயக்குவதற்கான வழிகளை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்பின், செப்., 9ம் தேதி வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. சர்க்கரைத்துறை ஆணையர் அன்பழகன் தலைமையிலான, தலைமை பொறியாளர், தொழில்நுட்ப வல்லுனர்கள், வேளாண் இணை இயக்குனர், மத்திய அரசின் கரும்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் உள்ளிட்ட, 11 பேர் கொண்ட குழுவினர், அக்.,10ம் தேதி சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலையை புனரமைக்க தேவைப்படும் நிதி, கரும்பு சாகுபடி விவசாயிகளிடம் கருத்து கேட்டு, முழுமையாக ஆலையை நவீனப்படுத்த, ரூ.180 கோடி தேவைப்படும் என விரிவான திட்ட அறிக்கையை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசுக்கு வழங்கினர். ஆனால், அறிக்கை வழங்கி, ஒன்றரை மாதமாகியும், ஆலைக்கான நிதி ஒதுக்காமல், அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் கூறியதாவது: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த வல்லுனர் குழு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை வழங்கியும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்க வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க கிராமங்கள் தோறும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை