உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதில் சிக்கல்; அவசர உத்தரவால் குழம்பும் ஆசிரியர்கள்

பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதில் சிக்கல்; அவசர உத்தரவால் குழம்பும் ஆசிரியர்கள்

உடுமலை:அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.கல்வியாண்டு தோறும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தவும், அரசு பள்ளிகளின் பல்வேறு சிறப்புகளை பெற்றோரிடம் கொண்டு சேர்க்கவும், ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.கடந்தாண்டு வரை, மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, ஆண்டு விழா கொண்டாடுவதற்காக, நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், பெரும்பான்மையான பள்ளிகளில் ஆண்டு விழா நடப்பதில்லை.தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன், சில பள்ளிகளில் விழா கொண்டாடப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் இவ்விழா கொண்டாடுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.நடப்பாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இவ்விழா கொண்டாடுவதற்கும், அதற்கான நிதிஒதுக்கீடு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அனைத்து பள்ளிகளிலும், பிப்.,15ம் தேதிக்குள் ஆண்டு விழா கொண்டாடுவதற்கும், சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு நிதிஒதுக்கீடு இருப்பினும், குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்துவதற்கு உத்தரவிட்டிருப்பதால், பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:ஆண்டு விழாவில், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், தனித்திறன்கள் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.வழக்கமாக ஆண்டு விழாக்கள், கல்வியாண்டின் இறுதி மாதத்தில் அல்லது பாடங்கள் அனைத்தும் முடித்த பின் நடத்தப்படும். தற்போது அவசர நிலையில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விழாவை முழுமையாக கொண்டாட முடியாது. ஆண்டு விழா நடத்துவதற்கு கல்வித்துறை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ