திருப்பூர்:மத்திய அரசு, கிராமத்தின் கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கை தரமும் உயர வேண்டும் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இருப்பினும், அத்திட்டம் குறித்த விழிப்புணர்வு, அடித்தட்டு மக்களிடையே குறைவு. பள்ளி, கல்லுாரிகள் மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல், மாவட்டம் தோறும், 'நமது லட்சியம் - வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்து வருகிறது.'ஜல் ஜீவன்' திட்டத்தில்,. 13 கோடி குடிநீர் இணைப்பு வழங்கியது. மூன்று கோடி பெண்களுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பலன்கள், நாடு முழுவதும், 12 கோடி தனிநபர்இல்லக்கழிப்பிடம் அமைத்தது, 10 கோடிக்கும் அதிகமான, இலவச காஸ் இணைப்பு, வீடற்றவர்களுக்கு நான்கு கோடி கான்கிரீட் வீடுகள் என, எண்ணற்ற வாழ்க்கை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.சிறு, குறு தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில், தொழிற்கடன் திட்டமும், எளிய முறையில் வணிகம் செய்யும் திட்டங்களும், வாழ்க்கையை மாற்றியுள்ளது. இவ்வாறான, மத்திய அரசு திட்டங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பிரசாரம் துவங்கியுள்ளது.பிரசார வாகனம், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை வலம் வந்து, தற்போது நகரப்பகுதியிலும் தனது பிரசாரத்தை துவக்கியுள்ளது. விழிப்புணர்வு வாகனத்தில், அகன்ற 'டிவி' திரையில் திட்ட விவரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மருத்துவக்குழுவினர், உடல் பரிசோதனை செய்கின்றனர். விளக்க கையேடு
பொதுமக்கள் ஏதாவது சந்தேகம், உதவி கேட்டாலும், அதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 120 பக்கங்களை கொண்ட, கையடக்க வண்ண கையேடும் வழங்கப்படுகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி, மத்திய அரசு தயாரித்துள்ள, அரசு திட்ட விவரங்களுடன் கூடிய காலண்டரும் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்திய அரசு முத்திரை பொறித்த காலண்டர், தனது இல்லத்தில் இருக்க வேண்டுமென, மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். காலண்டர் மற்றும் கையெட்டிலும், 'க்யூ.ஆர்.,' கோடு உள்ளது. அதனை 'ஸ்கேன்' செய்தால், மத்திய அரசு திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.வயதானவர்கள் மட்டுமல்ல, இளைஞர், இளம்பெண்களும், விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கண்டு, மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக, தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!