உடுமலை: குளிர்பருவம் விடைபெறுவதற்கு முன்னதாகவே, கோடை காலம் துவங்கியது போல், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளில் வெப்ப தாக்கம் சில நாட்களாக அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டது; வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை எட்டிவிட்டது.மாறுபட்ட பருவநிலை மாற்றத்தால், மழைப்பொழிவும் சற்று குறைந்தது. மழை குறைவாக பெய்யும் ஆண்டுகளில், பனிப்பொழிவும் குறையும், கோடை வெயில் அதிகரிக்கும் என, கிராமவாசிகள் கூறுகின்றனர். அதேபோல், இந்தாண்டு மார்கழி மாதம், அதிக பனிப்பொழிவு இல்லாமல், 'ஜில்' கிளைமேட்டுடன் முடிந்துவிட்டது.கடந்த ஜன., மாத இறுதியில் இருந்தே பனிப்பொழிவு குறைந்து விட்டது. தைமாதத்தின் மத்தியில் மீண்டும் காலை நேர பனிப்பொழிவு தலைகாட்டியது.இம்மாதத்துடன், குளிர் பருவம் விடைபெறுகிறது. வரும் மார்ச்சில் துவங்கி மே மாதம் வரையிலான, 90 நாள் கோடை பருவம்.அதிலும், கத்திரி வெயில் காலத்தின், 15 நாட்களை கடத்துவது பெரும் சவால். வெயில் காலத்தில், தர்பூசணி, முலாம்பழம், திராட்சை, வெள்ளரி ஆகிய பழவகைகளை அதிகம் சாப்பிட்டு, உடல் வெப்ப தாக்கத்தை தணிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்.'யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே,' என்பது போல், கோடை பருவம் துவங்கும் முன்பாகவே, வெயில் கொளுத்தி எடுக்கிறது. உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக மதிய நேர வெயில், 'சுளீர்' என்று வாட்டியெடுக்கிறது.உச்சிநேர வெப்பத்தால், கத்திரி வெயில் காலம் போல், ரோடுகளில் கானல்நீர் தென்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.பகல் நேரங்களில் நகர ரோடுகளில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. கடும் வெப்பத்தை தணிக்க மழை பெய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.