| ADDED : ஜூலை 31, 2011 11:16 PM
திருப்பூர் : போக்குவரத்து விழிப்புணர்வு முகாம், திருப்பூரில் இன்றும்,
நாளையும் நடக்கிறது; பங்கேற்கும் பொதுமக்களில் இருவருக்கு, தங்க நகை பரிசு
வழங்கப்படுகிறது. திருப்பூரில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
விபத்துகளை குறைக்கும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் முனைப்பு காட்டி
வருகின்றனர். முக்கிய ரோடுகளில், விபத்து காட்சிகளை மக்கள் மத்தியில்
நாடகமாக நடித்துக் காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அடுத்தகட்ட
முயற்சியாக, ரங்கசாமி செட்டியார் டவுன்ஹாலில், போக்குவரத்து விழிப்புணர்வு
முகாம் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. இம்முகாம் ஏற்பாடுகளை வடக்கு
போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். மாலை 5.00 முதல் இரவு 9.00
மணி வரை நடக்கும் இம்முகாமில், விபத்து காட்சி புகைப்படங்கள்
வைக்கப்படுகிறது. மேலும், சாலை பாதுகாப்பு குறித்த 45 நிமிட குறும்படமும்
ஒளிபரப்பப்படுகிறது. சிக்னல் விதிமுறை, சாலை விதிமுறை தொடர்பான விவரங்களை
போலீசார், பொதுமக்களுக்கு தெரிவிக்க உள்ளனர்; இதுகுறித்த விளக்க கையேடுகளை
வழங்குவதோடு, அவ்வழியாக வரும் டூவீலர்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு
ஸ்டிக்கர் ஒட்டுவது; வாகனத்தின் பிரேக் மற்றும் இன்ஜின் நிலைகளை
பரிசோதித்து அனுப்பவும் உள்ளனர். முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு,
சாலை விதிமுறைகள் குறித்த 10 வினாக்கள் அடங்கிய கேள்வித்தாள் வழங்கப்படும்;
அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பவர்களை, குலுக்கல் முறையில்
தேர்வு செய்து முதல் பரிசாக ஒரு கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக அரை கிராம்
தங்கம் 'ஸ்பான்சர்' மூலம் வழங்க உள்ளனர்.