| ADDED : ஆக 03, 2011 10:39 PM
பல்லடம் : வாய்சப்பை நோயின் பிடியில் இருந்து 100க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுக்கு சிகிச்சை அளித்து, கரடிவாவி கால்நடை கிளை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.பல்லடம் அருகே கரடிவாவி, ஆறாக்குளம், பருவாய், முத்தாண்டிபாளையம், கே.அய்யம்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், மல்லேகவுண் டன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக் கன்பட்டி புதூர் உட்பட பல இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட கலப்பின கறவை மாடுகள் உள்ளன. சிந்து, ஜெர்ஸி இன கலப்பின கறவை மாடுகள், பிற இன மாடுகளை விட, சற்று அதிக அளவு பால் கொடுப்பதால், இந்த ரக மாடுகளை விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். கடந்த மாதம், இப்பகுதியில் வாய்சப்பை நோய் என அழைக்கப்படும் கோமாரி நோய் பரவியது. இந்நோய்க்கு ஆளான 100க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், மூன்று நாட்கள் வரை தீவனம் எடுக்க முடியாமல், தண்ணீர் அருந்த முடியாமல் வாயில் நுரை தள்ளியபடி இருந்தன. கரடிவாவி கால்நடை கிளை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் வீடு, வீடாகச் சென்று வாய்சப்பை நோய் தாக்குதலுக்கு உள்ளான கறவை மாடுகளை கண்டறிந்து, இலவசமாக சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக, நோய் தாக்குதலுக்கு உள்ளான கறவை மாடுகள் உயிர் தப்பின; விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.