உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலம்பட்டியில் சுங்கச்சாவடி; வலுக்கும் எதிர்ப்பு!

வேலம்பட்டியில் சுங்கச்சாவடி; வலுக்கும் எதிர்ப்பு!

திருப்பூர்:'திருப்பூர் வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்படுவதன் வாயிலாக, திருப்பூர் நகரை மையப்படுத்தி இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் இடைபட்ட, 32 கி.மீ., ரோடு 'என்.எச்., 381' என்ற பெயரில் பராமரிக்கப்பட உள்ளது. இதற்காக, பொங்கலுார் ஒன்றியம், வேலம்பட்டியில், சுங்கச்சாவடி அமைத்து நுழைவுக்கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இதற்கு, பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு பொதுநல அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். சுங்கச்சாவடியை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், ஆதரவு அமைப்பினரை திரட்டி, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

நீர்நிலைஆக்கிரமிப்பு

ஈசன் முருகசாமி, நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்:சுங்கச்சாவடி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை, முழுமை பெறவில்லை. போதுமான சாலை விரிவாக்கமும் இல்லை. இச்சாலையானது, திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. 22 கி.மீ., ரோடு பூண்டி நகராட்சி வசம் உள்ளது.எனவே, கிராமப்புறமான பொங்கலுார் வேலம்பட்டியில் நீர்நிலையை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் பொதுமக்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் இச்சாலையை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவர் என்ற நிலையில், சுங்கக்கட்டணம் செலுத்த நேரிடும்; இது, பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

'டாஸ்மாக்'இருக்கலாமா?

பிரகாஷ், செயலாளர், திருப்பூர் கன்ஸ்யூமர் டிரஸ்ட்:திருப்பூர் - திருமுருகன்பூண்டியை கடக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையா, மாநகராட்சி சாலையா என்பதை, அரசு விளக்க வேண்டும். காரணம், தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஒரு கி.மீ., எல்லைக்குள், டாஸ்மாக் கடை மற்றும் பார் திறக்கக் கூடாது என, ஐகோர்ட் தெரிவித்துள்ளது.ஆனால், இச்சாலையில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது; அப்படியிருக்க, அதனை எப்படி, தேசிய நெடுஞ்சாலையாக கருத முடியும். வரும் நாட்களில் வாகன சுங்க கட்டணம் செலுத்தும் முறை, ஜி.பி.எஸ்., முறையில் இணைக்கப்பட உள்ளதால், சுங்கச் சாவடி எல்லையில் 2 கி.மீ., எல்லைக்குள் வாகனங்கள் வந்தாலே, சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வரும்.ஒவ்வொரு முறை இச்சாலையை கடக்கும் போதும், சுங்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், மக்கள் பெரிதும் பாதிப்பர், சுங்கக் கட்டணம் வசூலிப்பதை, கைவிட வேண்டும்.இதுதான் தகுதியா?'தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ள, 32 கி.மீ., துார ரோட்டில், 60 இடத்தில் 'ரோடு கிராஸிங்' உள்ளது. 21 இடங்களில் சிக்னல் உள்ளது. 30 கி.மீ., வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர். இந்த இடைப்பட்ட துாரத்தை கடக்க, ஒன்றரை மணி நேரமாகும் என்ற நிலையில், இது, எந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைக்குரிய தகுதியாக கருதப்படுகிறது எனவும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை