| ADDED : ஜன 09, 2024 11:13 PM
திருப்பூர்:வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதல் கனத்த மழை தொடர்ந்து பெய்தது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தமிழகத்தின் வடக்கு கடற்கரை பகுதிகளிலும், அரபிக் கடலில் தென் கிழக்கிலும், காற்றழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடப்பு வாரம் முழுவதும் தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இரண்டொரு நாள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் லேசான மழை காணப்பட்டது. இந்த நிலையிலும் கடும் குளிர் மற்றும் பனி நிலவியது.நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை துாறல் இருந்தது. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சற்று சிரமத்துக்கு ஆளாகினர். இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ரெயின் கோட், ஜெர்கின் அணிந்த படி சென்றனர். அதிகாலை முதல் துாறலாக இருந்த மழை காலை 10:00 மணிக்கு மேல் சற்று பலமாக பெய்தது.