உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விலைக்கு வாங்கி குடிநீர் பயன்படுத்துறோம்! அந்தியூர் மக்கள் வேதனை

விலைக்கு வாங்கி குடிநீர் பயன்படுத்துறோம்! அந்தியூர் மக்கள் வேதனை

உடுமலை; ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, அந்தியூர் ஊராட்சி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடுமலை ஒன்றியம், அந்தியூர் ஊராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சிக்குட்பட்ட ஜீவாநகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை. உள்ளூர் நீராதாரமான போர்வெல் தண்ணீரையும் ஊராட்சி நிர்வாகத்தினர் வழங்குவதில்லை. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். டேங்கர் லாரிகளில், பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, தண்ணீரை வாங்கி தொட்டிகளில் இருப்பு செய்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். 'திருமூர்த்தி அணையில் திருப்திகரமான நீர்மட்டம் இருந்தும், கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தேவையான அளவு தண்ணீர் நீரேற்று நிலையங்கள் வாயிலாக எடுத்தும், தங்கள் ஊராட்சிக்கு மட்டும் குடிநீர் கிடைக்காதது வேதனையளிக்கிறது; ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இப்பிரச்னைக்கு காரணம்,' என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்தியூர் ஊராட்சி அலுவலகம் அருகிலேயே இரு மேல்நிலைத்தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்கூரை அருகில், மக்களை அச்சுறுத்தும் வகையில், இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலைத்தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். புதிதாக மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும். இது குறித்து உடுமலை ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !