| ADDED : ஜன 17, 2024 12:34 AM
திருப்பூர்;திருப்பூரை சேர்ந்த ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 'அயலான்' கடந்த, 12ம் தேதி வெளியானது.திருப்பூர், சக்தி சினிமா தியேட்டரில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், பட இயக்குனர் ரவிகுமார் ஆகியோர் ரசிகர்களை சந்தித்தனர். பட இயக்குனர் ரவிகுமார் கூறுகையில்,''அயலான் படத்துக்கு, ரசிகர்கள் தரும் ஆதரவு சந்தோஷமாக இருக்கிறது; இடைபட்ட காலத்தில் பட்ட கஷ்டங்கள், ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இந்த படம் குழந்தைகளை ஈர்த்துள்ளது. அயலான் சினிமா, முழுமையாக ரசிகர்களை சென்றடைய சிவகார்த்திகேயன் தான் காரணம். படக்குழுவினர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. எனது இரண்டாவது படம் தான் இது; அது, இந்தளவு பெரிய படமாக இருப்பது, வியப்புக்குரியது,'' என்றார்.நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ''தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவை இயக்கும் அளவுக்கான இயக்குனரை திருப்பூர் கொடுத்திருக்கிறது. அயலான் வெளியாவதில் பிரச்னைகள் இருந்தன. அயலான் ரிலீஸ் செய்த பின் திருப்பூர் வர வேண்டும் என நினைத்தேன்; அது நடந்து விட்டது. அயலான் - 2, பட எண்ணம் இருக்கிறது. திருப்பூர், உலகம் முழுக்க ஆடைகளை ஏற்றுமதி செய்வது போன்று, திருப்பூரை சேர்ந்த இயக்குனர் மூலம் உலக சினிமா எடுக்க முடியும்,'' என்றார்.