திருச்சி:சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில், திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, கோட்ட மேலாளர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, மத்திய பஸ் ஸ்டாண்ட் சாலை, பாரதியார் சாலை வழியாக சென்று, மீண்டும் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. கூடுதல் கோட்ட மேலாளர் செல்வன், ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி, திருச்சி கோட்ட அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், சாரண இயக்கத்தினர் பேரணியில் பங்கேற்றனர். அதன் பின், ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூன் 6ம் தேதி, சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது, ரயில்வே கேட் மூடி இருக்கும் போது, தண்டவாளத்தை கடப்பது, கேட்டின் கீழ் நுழைந்து கடந்து செல்வது, கேட் அருகில் பயணிப்பது போன்ற செயல்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. திருச்சி கோட்டத்தில், 496 ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது, இதில், கடந்த ஓராண்டில், 81 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஏற்படுத்தியவர்களிடம் இருந்து 8.76 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. லெவல் கிராசிங் அருகிலேயே விழிப்புணர்வு சிக்னல் மூலம் ரயில்வே கேட் மூடப்படுவது குறித்து அறிவிப்பு வழங்கப்பட்டாலும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் போது அதனை கடந்து செல்வதால், விபத்து நேரிட்டு ரயில்கள் தாமதம் மற்றும் தேவையில்லாத போக்குவரத்து நெரிசலும், இடையூறும் ஏற்படும். திருச்சி கோட்டத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங் இல்லை; அனைத்து ரயில்வே கேட்களிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 ரயில்வே கேட்களுக்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.