| ADDED : ஜன 17, 2024 12:01 AM
திருச்சி : திருச்சி ராமலிங்கநகரை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த். இவரை கடந்த, 11ம் தேதி, பிரபல பன்னாட்டு கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக, ஒருவர் பேசினார். அப்போது, அந்த டாக்டருக்கு தைவான் நாட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கூரியரில் வந்துள்ளதாக கூறிய ஒரு நபர், அந்த விபரத்தை போலீசில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.இந்நிலையில், அடுத்த நாள் டாக்டரை தொடர்பு கொண்ட இன்னொரு நபர், தான் சி.பி.ஐ., அதிகாரி என கூறி, 'உங்கள் ஆதார் எண் மூலம் வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து ரொக்கப்பணத்தையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும்' என கூறினார்.இதை உண்மை என நம்பிய டாக்டர் ஆனந்த், தன் வங்கிக் கணக்கில் இருந்த, 52.10 லட்சம் ரூபாயை, ஆர்.டி.ஜி.எஸ்., மூலம், அந்த நபர் சொன்ன இரு வங்கிக்கணக்குகளுக்கு ஆன்லைனில் அனுப்பினார்.இந்த விபரத்தை சொல்ல, அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த மொபைல் எண் சுவிட்ச் - ஆப் செய்யப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த டாக்டர் ஆனந்த், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், டாக்டரை நுாதனமாக ஏமாற்றியவர்களை தேடி வருகின்றனர்.