வேலுார்: ஆற்காடு அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு, 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சலீம்பாஷா, 26, திருமணமானவர்; கடந்த, 2022 ம் ஆண்டு, அவர் மனைவி, தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, சலீம்பாஷாவுக்கு அவரது உறவினர் தன், 14 வயது மகள் மூலம் உணவு கொடுத்து வந்தார். அப்போது சலீம்பாஷா, சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், உடல்நலம் பாதித்த சிறுமியை, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி, 5 மாத கர்ப்பம் என தெரியவந்தது. இது குறித்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சலீம்பாஷாவை போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இது குறித்த வழக்கு, வேலுார் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைப்பொன்னி, நேற்று முன்தினம் மாலை, சலீம்பாஷாவுக்கு, 22 ஆண்டு சிறை தண்டனை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில், அரசு வக்கீல் சந்தியா ஆஜரானார்.