| ADDED : ஜன 12, 2024 12:25 AM
காட்பாடி,:வேலுார் மாவட்டம் காட்பாடி, கிறிஸ்டியான் பேட்டை வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிபவர் வசந்தி, 40. இவர் மீது நிறைய புகார்கள் சென்றதால், வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசின், 11 பேர் கொண்ட குழு, சோதனைச்சாவடியை நேற்று முன்தினம் இரவு கண்காணித்தனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் வசந்தி பணம் பெற்று, சோதனை செய்யாமல், வாகனத்தை அனுப்பியது தெரிய வந்தது. பணி முடிந்து ராணிப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு காரில் புறப்பட்டவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பின் தொடர்ந்தனர். சிறிது துாரம் சென்ற நிலையில், வசந்தியின் காரை வழிமறித்து சோதனை செய்ததில், 3 லட்சம் ரூபாய் இருந்தது. அவரது வீட்டுக்கும் சென்று சோதனை செய்தனர். அங்கு,3.25 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். மொத்தம், 6.25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிந்தனர்.மேலும், அவர் வீட்டில் நகை, நிலம் சம்பந்தமான ஆவணங்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.