| ADDED : ஜூன் 16, 2024 10:29 PM
வானுார் : கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் தொடரும் பைக் திருட்டுகளைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் ஆரோவில், வானுார், கோட்டக்குப்பம், கிளியனுார், மரக்காணம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதில் கோட்டக்குப்பம், ஆரோவில் காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிகளில் பைக்குகள் திருட்டு அடிக்கடி நிகழ்கிறது. கடந்த சில மாதங்களுக்குள் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடு போயின.குறிப்பாக அரோமா கார்டன், மொரட்டாண்டி டோல்கேட் பகுதிகளில் மட்டுமே ஏரளமான வாகனங்கள் திருடு போனது.இதே போன்று ஆரோ பீச் பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குகளையும் குறி வைத்து திருடுகின்றனர். இது போன்று பைக்குகள் திருடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களையும் போலீசார் உடனுக்குடன் ஏற்றுக்கொள்வதும் கிடையாது. வழக்குகளும் பதிவு செய்வது கிடையாது.கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் தனியாக கிரைம் டீம் உள்ளது. இதுவரை திருடு போன பைக்குகள் பறிமுதல் செய்யப்படவில்லை. குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. பெயரளவிற்கு மட்டுமே கிரைம் டீம் செயல்பட்டு வருகிறது. இதனால் பைக்குகள் பறி கொடுத்தவர்கள், பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.அண்டை மாநிலமான புதுச்சேரியில் அடிக்கடி வாகனங்கள் திருடு போனாலும், அதற்கான ஆசாமிகளை போலீசார் உடனுக்குடன் கைது செய்து, பைக்குகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விடும் பெருமை இன்றளவும் உள்ளது. ஆனால் பக்கத்தில் உள்ள கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் பைக்குகள் திருடப்பட்டு பல மாதங்களை கடந்தும், இதுவரை டூ வீலர்களும் பறிமுதல் செய்யப்படாததால், பைக்கை பறி கொடுத்தவர்கள், புலம்பி வருகின்றனர்.