| ADDED : ஜூலை 09, 2024 04:18 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பாக கலால் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பேசியதாவது:கிராம அளவில், வி.ஏ.ஓ.,க்கள் தலைமையில் உள்ள குழுவினர் மூலம் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்த 128 பேர் கொண்ட பட்டியல் மீது நடவடிக்கை எடுத்து 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 50 பேர் குறித்து ரகசிய விசாரணை செய்வதாக மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.கண்டாச்சிபுரம் அருகே வீரபாண்டி கிராமத்தில் கள்ளச்சாராயம், போதை பொருள், புகையிலை பொருட்கள் குறித்த செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் தொடர் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.செஞ்சி, மேல்மலையனுார், விழுப்புரம் தாலுக்காக்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடமிருந்து, கள்ளச்சாராயம், போதை பொருள், புகையிலை பொருட்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் கொண்ட பட்டியலை வாரம் தோறும் சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., மூலம் பெற்று தொடர் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, கோட்ட கலால் அலுவலர்கள், புதுச்சேரி எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உட்பட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.