அவலுார்பேட்டை : விவசாயிகளுக்கு நன்மை செய்யாமல் மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்தும் மோடியை நாட்டை விட்டு அகற்றிட ஓட்டுப்போட சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மஸ்தான் பேசினார்.அவலுார்பேட்டையில் ஆரணி தொகுதி வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து நடந்த இறுதி கட்ட பிரசாரத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில்;தமிழக முதல்வர் தேர்தலில் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்கள் அனைத்தையும் மக்கள் நலன் கருதி நிறைவேற்றி வருகிறார்.காலை சிற்றுண்டி திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் இலவச மின்திட்டம் இப்படி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நன்மை செய்யவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்தும் பிரதமர் மோடியின் பா.ஜ., ஆட்சியை அகற்றுவதற்கு வாக்காளர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்து உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் பேசினார்.முன்னதாக சித்தகிரி முருகன் மலை அடிவாரத்திலிருந்து தொண்டர்களின் பைக் ஊர்வல பிரசாரத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.இதில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி, சாந்திசுப்ரமணி, தலைமை தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், காங்., வட்டார தலைவர் ராஜவேலாயுதம், மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன், தி.மு.க.,கிளை செயலாளர் நடராஜன், ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், சம்பத், முருகன், பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.