| ADDED : ஜூலை 29, 2024 04:47 AM
விழுப்புரம், : சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமத்தில், பிரசித்தி பெற்ற முப்பெரும் சக்தி ஸ்தலமாக விளங்கும், அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மன் கோவில் ஆடி மாத உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.இக்கோவிலில், நேற்று முன்தினம் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நேற்று அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. காலை 7.௦௦ மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கும், பிறகு உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு பிற்பகல் உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.