| ADDED : ஜூன் 02, 2024 04:43 AM
மரக்காணம்: மரக்காணம் அருகே ஆம்னி கார் மீது அரசு பஸ் மோதியதில் சோப்பு வியாபாரி இறந்தார்.புதுச்சேரி, சுதானா நகரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்,55; சோப்பு வியாபாரி. இவர் நேற்று காலை ஆம்னி காரில் சென்று மரக்காணம் பகுதியில் சோப்பு வியாபாரம் செய்துவிட்டு, மதியம் 12:00 மணிக்கு இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டார். பனிச்சமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற புதுச்சேரி அரசு பஸ் மோதியது. அதில், காரை ஓட்டிச் சென்ற லட்சுமிநாராயணன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரில் சிக்கி இறந்த லட்சுமி நாராயணன் உடலை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இதனால் இ.சி.ஆரில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
எங்கே போனது மனித நேயம்
ஆம்னி கார் மீது பஸ் மோதியதில், காரில் சென்ற சோப்பு வியாபாரி இடிபாட்டில் சிக்கி இறந்தார். காரில் இருந்த சோப்புகள் சாலையில் சிதறியது. அதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள், விபத்தில் சிக்கியவரை மீட்க முன்வராமல், சாலையில் சிதறிக் கிடந்த சோப்புகளை அள்ளிச் சென்றது வேதனையை ஏற்படுத்தியது.