விழுப்புரம்: கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்துக்கான, இரும்பு பாலம் தயாராகியுள்ளதால், அதனை நகர்த்தி வைக்கும் பணி நாளை மறுநாள் 27ம் தேதி தொடங்க உள்ளது.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல்கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி (எம்.என்.குப்பம்) இடையே சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இடையே கிடப்பில் உள்ள கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.இந்த பாலத்துக்காக, கடந்தாண்டே இரு மார்க்கத்திலும், இணைப்பு சாலை போடப்பட்டது. பிறகு ரயில் பாதையை இணைக்கும், இரும்பு பாலப்பணி, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. அங்கு 64 மீட்டர் நீளத்திலும், 30 மீட்டர் அகலத்திலான 'பாஸ்டிங் கர்டர்' எனப்படும் மிகப்பெரிய இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.இதற்காக கடந்த பிப். 28ம் தேதி முதல், கண்டமங்கலத்தில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்காலிக பவுண்டேஷன்கள் போட்டு முதலில், இடது புறத்தில் (விழுப்புரம்-புதுச்சேரி மார்க்கம்) இரும்பு மேம்பாலம் (பாஸ்டிங் கர்டர்) கட்டப்பட்டு ஏப்ரலில் தயாரானது. இதனையடுத்து, வலது புறம் (புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கம்) இரும்பு பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக, ரயில்வே துறையில், படிப்படியாக அனுமதி பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதனால், அந்த பகுதியில் 20 கி.மீ., வேகத்தில் மெதுவாக ரயில்கள் இயக்கப்பட்டது.இதனையடுத்து, இருபுறமும் இரும்பு பாலங்கள் கட்டப்பட்டு தயாராகியுள்ளதால், தற்போது, ரயில் பாதையின் குறுக்கே, 600 டன் எடையுள்ள இரும்பு பாலங்களை நகர்த்தி, கான்கிரீட் பில்லர்கள் மீது வைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.இது குறித்து, நகாய் திட்ட அதிகாரிகள் கூறியதாவது: கண்டமங்கலத்தில் ரயில்வே பாலத்தை இணைக்கும், பாஸ்டிங் கர்டர் இரும்பு பாலம் இருபுறமும் தனித்தனியாக தயாராகியுள்ளது. தற்போது, அதனை ரயில் பாதையின் குறுக்கே நகர்த்தி வைக்கப்பட உள்ளது. ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில், அவர்களது அனுமதி பெற்று, ஒரு புறத்தில் உள்ள இரும்பு பாலத்தை நகர்த்தி வைப்பதற்கான தற்காலிக சோதனை நேற்று நடந்தது. அதற்கு 4 மணி நேரம் ஆனது.நாளை மறுநாள் 27ம் தேதி, முதலில் ஒருபுறம் தயாராகியுள்ள இரும்பு பாலம் நகர்த்தி வைக்கப்படும். அதற்காக பாலத்தின் மீது டிராக் அமைத்து, அதில் வின்ச் ரோப் மூலம் இழுத்து நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. ரயில்வே அதிகாரிகளின் முன்னிலையில், ரயில்பாதையில் மின் சப்ளை தடை செய்து, மெதுவாக நகர்த்தி வைக்கப்படும். மற்றொரு நாள், இன்னொரு இரும்பு பாலமும் நகர்த்தி வைக்கப்படும். அதன் பிறகு, இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, பாலம் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.