| ADDED : ஜூன் 13, 2024 12:09 AM
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கட்டளை கிராமத்தில் ஆடு திருடிய நரிக்குறவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி,68; இவரது மனைவி தெய்வாணை,55; இருவரும்நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர்களது விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளனர்.இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 23 ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது மாருதி 800 கார் மற்றும் இரண்டு ஹீரோ ஹோண்டா பைக்கில் மூன்று நபர்கள் ஆடுகளை திருடி கொண்டு புதுச்சேரியை நோக்கி சென்றது தெரியவந்தது.அதன் பின் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் லாஸ்பேட்டையை சேர்ந்த பழனி மகன் அருண்பாண்டி,20; சங்கர் மகன் மணிகண்டன்,21; ராஜேந்திரன் மகன் மணிகண்டன்,27; மூவரும் நரிக்குறவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கட்டளை பகுதியில் ஊசி, மணி, பொம்மைகள் விற்பனை செய்ய வரும்பொழுது யாரும் இல்லாத விவசாய நிலத்தில் பட்டி அமைத்து ஆடுகள் அடைக்கப்பட்டதை நோட்டமிட்டுள்ளனர்.அதன்பின் மூவரும் ஆடுகளை திருட திட்டமிட்டு மாருதி கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளை எடுத்து வந்து 23 ஆடுகளை திருடி சென்றதாக ஒப்புக்கொண்டனர். மேலும் திருடிய ஆடுகளை வரும் பக்ரீத் பண்டிகையின் போது அதிகவிலைக்கு விற்பனை செய்ய வீட்டிற்கு பின்புறம் அடைத்து வைத்ததாக கூறினர்.பின் போலீசார் திருடுபோன ஆடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.