விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2025ம் ஆண்டில் 12 ஆயிரத்து 887 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில், 10 ஆயிரத்து 226 வழக்குகளில் புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2025ம் ஆண்டில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போது வரை 2,797 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காணாமல் போன 1,039 பேர் போலீசார் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 489 கொள்ளை, 21 வழிப்பறி, 468 திருட்டு ஆகிய குற்ற வழக்குகள் நடந்துள்ளது. இந்த வழக்குகளில் சம்மந்தபட்ட 339 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, 2 கோடியே 20 ஆயிரத்து 545 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 32 கொலை வழக்குகளில் 68 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கொலை குற்ற வழக்குகளில் 42 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்து. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1,825 பேர் மீதும், மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 5,058 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற வழக்குகளில் 50 பேர் மீது உட்பட மொத்தம் 44 ஆயிரத்து 732 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து வழக்குகளில் 611 பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில், கொலை, கொள்ளை, சாராயம் கடத்தல் ஆகிய குற்ற செயலில் ஈடுபட்ட 11 சாராய வியாபாரிகள், 12 கஞ்சா குற்றவாளிகள், 1 சைபர் குற்றவாளி உட்பட 55 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 105 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, சம்பந்தபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 242 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 24 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் 244 வழக்குகளில் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 5,430 கிலோ கிராம் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 54 லட்சத்து 30 ரூபாய் ஆயிரம் ஆகும். குட்கா விற்ற 182 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. 32 லாட்டரி வழக்குகள் பதிவு செய்து 68 பேர் கைது செய்யப்பட்டு, 70 ஆயிரத்து 490 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் கடத்துவோர், விற்போர் என 2,195 வழக்குகள் பதிவு செய்து 2,224 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1,004 லிட்டர் சாராயம், 122 லிட்டர் கள்ளு, 1,850 லிட்டர் ஊறல், 14,134 லிட்டர் மதுபாட்டில்கள் மதுபான வழக்குகளில் தொடர்புடைய 358 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த தலைமறைவு குற்றவாளிகள் 2,440 பேர் கைது செய்து கோர்டில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 981 பழைய குற்றவாளிகளை நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நன்னடத்தை நிபந்தனை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 269 போக்சோ குற்ற வழக்குகளில் சம்மந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டில் போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் நிருபிக்கப்பட்ட 23 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.