| ADDED : ஜன 14, 2024 05:55 AM
மரக்காணம் : மரக்காணம் பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை பாதுகாப்பது குறித்து வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் சரவணன் செய்திக்குறிப்பு:மரக்காணம் தாலுகாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஜனவரி மாதம் 327 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் நெல், உளுந்து, வேர்க்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தில் தேங்கியுள்ள நீரை வடித்து அருகிலுள்ள பண்ணை குட்டைகள், குளம், குட்டைகளில் சேமித்து வைக்க வேண்டும்.நீர் வடிந்தபின் மேலுரமாக தழை மற்றும் சாம்பல் சத்தினை 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும். தேவைப்படும் இடத்தில் தழை மற்றும் நுண் சத்துகள் கலவையை இலை வழியாக தெளிக்க வேண்டும்.குறிப்பாக நீர் தேங்கிய நெல் வயலின் வளர்ச்சி பருவத்தில் நீர் வடிந்த பின் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இரவு முழுக்க ஊற வைத்து இட வேண்டும். துார்கட்டும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஒரு கிலோ சிங்க்சல்பேட் 2 கிலோ யூரியா உடன் கலந்து ஊறவைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.தண்டு உருளும் பருவத்தில் உள்ள நெற்பயிருக்கு 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை 10 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் ஊற வைத்து மறுநாள் அதன் தெளிந்த நீருடன் 2 கிலோ யூரியா ஒரு கிலோ பொட்டாஷ் உரம் கலந்து 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.பூக்கும் பருவத்தில் உள்ள உளுந்து பயிருக்கு 25 மற்றும் 35வது நாட்களில் 2 சதவீத டி.ஏ.பி., கரைசல் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.