| ADDED : நவ 21, 2025 05:11 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பல ஆண்டுகளுக்கு முன் கிரயம் பெற்ற நிலத்தில் பங்கு இருப்பதாக கூறி பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விக்கிரவாண்டி அடுத்த சாலை மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி மனைவி சுமதி, 35; இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த கோதண்டராமன் மகன் வீரப்பன் என்பவரிடம் ஒன்றரை ஏக்கர் நிலம் கிரயம் பெற்று அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி கோதண்டராமன் மனைவி சந்திரா மற்றொரு மகன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் கிரயம் பெற்ற சுமதியிடம் சென்று நிலத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தகராறு செய்து மிரட்டல் விடுத்தனர். சுமதி கொடுத்த புகாரின் பேரில் சந்திரா, ராமமூர்த்தி ஆகிய 2 பேர் மீதும் பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு வழக்கு திண்டிவனம் அடுத்த வி.பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் மனைவி உமா, 36; இவரது வீட்டின் அருகில் இருந்த 5 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தில் மனை பட்டா வாங்கியுள்ளார். இதை அறிந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த சாந்தி, பிரேமா, பச்சையம்மாள், குமார் ஆகியோர் கடந்த 11ம் தேதி, உமாவிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சாந்தி, பிரேமா, பச்சையம்மாள், குமார் ஆகிய 4 பேர் மீதும் பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.