| ADDED : டிச 01, 2025 05:29 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய, மாநில எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வரின் கவன ஈர்ப்புக்கான மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பிராஜ் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சேகர், சென்னை மண்டல செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன் சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர்கள் சுப்பம்மாள், அனிதா, செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முகாமில், எஸ்.சி., - எஸ்.டி., மக்களின் பின்னடைவு காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 12.50 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளில் குத்தகை அடிப்படையில் பணிகள் செய்ய வேண்டும். வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் களத்தில் யார் கூட்டமைப்பு பிரமுகர்களை அழைத்து பேசுகிறார்களோ அவர்களோடு கைகோர்த்து தேர்தலை சந்திப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.