திண்டிவனம் : திண்டிவனம் வாகன போக்குவரத்து மிகுந்த சாலைகளில் பாதாள சாக்கடை பணி முழுமையாக முடிக்காததால் மண் சாலையாகி, புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டிவனம் நகராட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 268 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. பணிகள் அனைத்தும் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மேன்ேஹால் அமைக்கப்பட்டு, பைப் புதைக்கப்பட்டுள்ளது. தீர்த்தக்குளம், அகழிகுளம், அவரப்பாக்கம், வகாப் நகர் உட்பட 6 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து கழிவு நீர் உந்து நிலையங்களிலிருந்து பைப் மூலம் கொண்டு செல்லப்படும் கழிவு நீர், சலவாதி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ கம்போசிங் மையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.தற்போது இறுதி கட்டமாக திண்டிவனம் நகராட்சியில், போக்குவரத்து மிகுந்த சாலைகளான நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, புது மசூதி வீதி, பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜி தெரு, செஞ்சி ரோடு ஆகிய இடங்களில் மேன்ேஹால் அமைத்து, ராட்சத பைப் மற்றும் பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, மீண்டும் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது.இதனால் சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாகிப்போனது. போக்குவரத்து சாலைகளில் பணிகள் முடிந்த பிறகு, உடனடியாக சிமென்ட் சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறக்கிறது. இதனால், பொது மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் துகள்கள் விழுந்து வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.இப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மண்புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கடைவீதிகளில் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மீது மண் புழுதி படிவதால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மண்புழுதி பறப்பதால் பொதுமக்களுக்கு மூச்சி திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் முறையாக சாலை போடும் வரை, புழுதி பறப்பதைத் தடுக்கும் வகையில், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் டேங்க்கர் வாகனம் மூலம், தினந்தோறும் பணிகள் நடைபெற்ற இடத்தில் தண்ணீர் அடித்து க்யூரிங் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.