உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகரில் தொடரும் திருட்டு சம்பவங்களால்... அச்சம்; போலீசாரின் ரோந்துப்பணியில் சுணக்கம்

நகரில் தொடரும் திருட்டு சம்பவங்களால்... அச்சம்; போலீசாரின் ரோந்துப்பணியில் சுணக்கம்

விழுப்புரம் : விழுப்புரம், வளவனுார் பகுதிகளில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களையொட்டி, பொதுமக்கள் வீடுகளை பூட்டி கொண்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். நோட்டமிட்டு கைவரிசை காட்டும் மர்ம நபர்களை சி.சி.டி.வி., மூலமாக கூட பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 49 போலீஸ் ஸ்டேஷன்களும், 1,200க்கும் மேற்பட்ட போலீசாரும் பணிகளில் உள்ளனர். இதில், விழுப்புரம் நகர பகுதிகளில் தாலுகா, மேற்கு, டவுன் போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமின்றி, டவுன் டி.எஸ்.பி., அலுவலகம், போக்குவரத்து பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களும், வளவனுாரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது.இதில், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு 70க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. அதே போல், வளவனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த இரு ஸ்டேஷன்களுக்கு உட்பட்டுள்ள பரந்து விரிந்துள்ள எல்லை பகுதிகளை வைத்து, மர்ம நபர்கள் தங்களின் திருட்டு சம்பவங்களை செய்து வருகின்றனர்.விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட வழுதரெட்டி, சாலாமேடு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களில் மட்டும், வெளியூருக்கு கோவில் திருவிழாவிற்கு சென்ற நேரத்தில், ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர், ஏ.சி., மெக்கானிக் என 3 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, ரூ. 1 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். அது மட்டுமின்றி, வளவனுார் அருகே இளங்காடு கிராமத்தில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 4 சவரன் நகையை ஜட்டி திருடர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க, போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி., பதிவுகளை சோதனை செய்தும் கூட, அவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கு என தனியாக போலீசாருக்கு, சைரன் கொண்ட இருசக்கர வாகனங்கள் வழங்கியும் கூட அவர்கள் சரிவர டூட்டிக்கு செல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர்.போலீசார் விழுப்புரம், வளவனுார் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தாமல் தற்போது வரை அலட்சிய போக்கையே காட்டி வருகின்றனர். இதனால், வீடுகளில் இரவு நேரங்களில் கூட பொதுமக்கள் பாதுகாப்பாக துாங்கவும், வீட்டை பூட்டி கொண்டு வெளியூர் செல்லவும் கூட அச்சப்படுகின்றனர். மக்களின் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்து, போலீசார் மர்ம நபர்கள் அதிகமாக சுற்றும் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுவதோடு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக பிடித்து கடும் தண்டனை வழங்கி, மக்கள் மனதில் காவல் துறை மீதான நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை