விழுப்புரம்: திண்டிவனத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை கலெக்டர் பழனி நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திண்டிவனம் தாலுகாவில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக முதல்வர் அறிவித்தபடி கலெக்டர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் ஒரு நாள் முழுவதும் ஒரு தாலுகாவில் தங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் 'உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் ” திண்டிவனத்தில் நேற்று தொடங்கப்பட்டது.திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. திண்டிவனம் தாலுகாவில் மயிலம், தீவனூர், ரெட்டணை, ஆவணிப்பூர், ஒலக்கூர், வடசிறுவலூர், திண்டிவனம் ஆகிய குறுவட்டங்களுக்கு தனித்தனியாக உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு,அவர்கள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை மக்களிடம் கோரிக்கை கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக திண்டிவனம் தாலுகா சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியில் உடற்கல்வி நேரத்தில் கட்டாயம் விளையாட்டுப்பயிற்சியினை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஆய்வக உபகரண வசதிகள் உள்ளது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் 14 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்து, பணியின் விவரம் குறித்த தகவல் பலகையினை வைத்திடுமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கு திருப்புத்தேர்வு நடைபெற்றுவருவதையும் பார்வையிட்டு விசாரித்தனர். பிறகு பிளஸ் 2 மாணவர்களிடம் பாடங்களிலிருந்து கேள்விகளை கேட்டறிந்தனர்.தொடர்ந்து கீழ்ஆதனூர், ஒலக்கூர் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளி வீடு கட்டியுள்ளதை பார்வையிட்டனர். கடவம்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையினை பார்வையிட்டு இருப்பு பதிவேடு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வுமேற்கொண்டதுடன், பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது. அப்பகுதியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு விரைந்து பணிகளை மேற்கொண்டு குடியிருப்பினை கட்டி முடித்திட அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டதுடன், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த பதிவேடு, பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட விவரம், அலுவலர்கள் ஆய்வுப்பணி விவரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் எஸ்.பி., தீபக் சிவாச், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெ க்டர் திவ்யான்ஷி நிகம், மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.