விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், 2 லட்சத்து 91 ஆயிரத்து 905 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 ஆயிரத்து 506 பேருக்கு நோய் தாக்கம் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை துவக்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள 8,713 சுகாதார துணை மையங்களுடன், 385 கிராமப்புற தொகுதிகளுக்கும், 450 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் சேர்த்து, 21 மாநகராட்சி பகுதிகளிலும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்காக, தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு, கடந்த 2024ம் ஆண்டிற்கான ஐ.நா. சபையின் முகமைகளுக்கு இடையேயான பணிக்குழு விருது வழங்கப்பட்டுள்ளது. தொற்றா நோய்களைக் கண்டறிந்து, நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பெருகிவரும் தொற்றா நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக மகளிர் சுகாதார தன்னார்வலர்கள், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று பரிசோதனைகள் செய்கின்றனர். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தல், மருந்து, மாத்திரைகள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 905 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 14 ஆயிரத்து 506 பேருக்கு நோய் தாக்கம் கண்டறியப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 8833 பேருக்கு ரத்த அழுத்த அறிகுறிகள், 2,757 பேருக்கு சர்க்கரை நோய் அறிகுறிகள், 1,628 பேருக்கு உயர் அழுத்த மற்றும் சர்க்கரை நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டது. மேலும், 44 ஆயிரத்து 212 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 32 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இயன்முறை மருத்துவம் 385 பேரும், வலி மற்றும் நோய் ஆதரவு சிகிச்சை 278 பேரும் வீட்டிலேயே வழ ங்கும் டயாலிசிஸ் சேவையை 12 பேரும் பெற்று வருகின்றனர்.