| ADDED : நவ 24, 2025 06:51 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பலத்த மழையால் சேதமடைந்த நாகலாபுரம் தரைப்பாலம் சீரமைக்காததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திண்டிவனம் நகர மையப்பகுதியான நாகலாபுரம் தரைப்பாலம், கடந்த ஆண்டு பெஞ்சால் புயலின் போது, கிடங்கல் ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடியோடு அடித்து சென்றது. திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் நிரந்தர பாலம் கட்டுவதற்கு பதிலாக, ரூ. 8 லட்சம் செலவில் கடந்த ஆண்டு, குழாய்கள் பதித்து சீரமைப்பு பணி மேற்கொண்டனர். தரமற்ற முறையில் சீரமைப்பு பணி நடந்ததால், கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையின்போது, கிடங்கல் ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நகராட்சியால் ரூ. 8 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் அடித்து செல்லப்பட்டது. பாலம் முற்றிலும் சேதமடைந்து போனதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பலர் உடைந்த பாலத்தின் வழியாக இறங்கி ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர். தரைப்பாலத்தை அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்தும், இதுவரை புதிய தரமான பாலம் கட்ட இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து, திண்டிவனம் நகராட்சியில் விசாரித்தபோது, உடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் திட்டமதிப்பீடு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. புதிய பாலம் கட்டுவதுடன், தரமற்ற சீரமைப்பு பணி குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.