| ADDED : ஜன 14, 2024 06:05 AM
திண்டிவனம் :பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால், ஓங்கூர் மற்றும் விக்கிரவாண்டி டோல் கேட்களில் நெரிசல் நிலவியது.பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, சென்னையில் தங்கியுள்ள தென்மாவட்டங்களை சேர்ந்தோர், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ், கார், பைக் மற்றும் வேன்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.இதன்காரணமாக, விழுப்புரம் மாவட்ட எல்லையான திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் டோல் கேட்டில் கடும் நெரிசல் நிலவியது. இதனால், சென்னை மற்றும் திருச்சி மார்க்கங்களில் தலா 5 பாதைகள் திறந்த போதிலும், வாகனங்கள் மெல்ல நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. விக்கிரவாண்டி
நேற்று முன்தினம் மாலை 4:00 மணி முதல் தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் சாரை சாரையாக அணிவகுத்து சென்றன. வழக்கமாக காலை, மாலை மற்றும் இரவு உணவு நேரங்களில் போக்குவரத்து சற்று குறைவாக காணப்படும். ஆனால் நேற்று இடைவெளி இன்றி சாலைகளில் வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்தன. பைபாஸ் சாலையில் குறுக்கே பாதசாரிகள், வாகனங்கள் கடக்க போலீசார் வாகனங்களை சில நிமிடங்கள் நிறுத்திய போது 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.நேற்று முன்தினம் 40 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்த நிலையில், நேற்று 63 ஆயிரம் வாகனங்கள் கடந்தன.