| ADDED : டிச 23, 2025 06:18 AM
தி ண்டிவனத்தின் மைய பகுதியில் உள்ள காந்தியார் திடலில் அரசியல் கட்சிகள் நடுரோட்டில் மேடை போட்டு பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. காந்தியார் திடல் உள்ள பகுதியில், திண்டிவனத்திலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் அனைத்தும் பஸ், வாகனங்களும் செல்வது வழக்கம். காந்தியார் திடலில் கூட்டம் போடாமல், அருகிலுள்ள வ.உ.சி.திடலில் கூட்டம் நடத்த வேண்டும் என போலீசார் பெயருக்கு அறிவுறுத்தினாலும், காந்தியார் திடலில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தருவது, நகர வியாபாரிகள், பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக காந்தியார் திடலில் ரோட்டை மறித்து கூட்ட மோடை போட்டாலும், மேடைக்கு அருகில் பொது மக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு அரசியல் கட்சிகள் வழிவிட்டு வந்தனர். ஆனால் நேற்று இரவு ஒரு கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்காக காலையிலேயே நடுரோட்டில் மேடை அமைத்து, மேடையையொட்டி பொது மக்கள், பள்ளி மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லாதவாறு, குறுக்கே சவுக்கு கழியை கட்டி தடங்கள் ஏற்படுத்தியது. பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இனி அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு வ.உசி., திடலில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.