உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீடிக்கும் கவுன்சிலர்கள் மோதல் போக்கு இடியாப்ப சிக்கலில் நகராட்சி நிர்வாகம்

நீடிக்கும் கவுன்சிலர்கள் மோதல் போக்கு இடியாப்ப சிக்கலில் நகராட்சி நிர்வாகம்

திண்டிவனம் நகர மன்ற தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்மலாவும், துணைத் தலைவராக வி.சி., கட்சியைச் சேர்ந்த ராஜலட்சுமியும் உள்ளனர். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில், 26 பேர் தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்களாக உள்ளனர். மீதமுள்ள 4 பேர் அ.தி.மு.க., 2 பேர் பா.ம.க., மற்றும் வி.சி.,கட்சியில் ஒருவரும் உள்ளனர்.ஆரம்பத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் அமைச்சர் மஸ்தான் ஆதரவுடன் ஒரே அணியாக இருந்தனர். இடையே அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தி.மு.க.,வைச் சேர்ந்த 13 கவுன்சிலர்கள் பல மாதங்களாக தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நகர மன்றத்தில் தீர்மானத்திற்கு ஆதரவு தராத நிலை, வெளிநடப்பு, தர்ணா போராட்டம், ஒட்டு மொத்த ராஜினாமா என பல்வேறு நிலைப்பாட்டை 13 கவுன்சிலர்கள் எடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், நகர மன்ற தவைருக்கு அருகே துணைத் தலைவருக்கு, சீட் ஒதுக்க வேண்டும் என்ற பிரச்னை எழுந்தது. இதற்கு நகர மன்ற தலைவர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அரசு ஆணையில் எந்த அதிகாரமும் வழங்கவில்லை என்று கூறி, முடிவு எடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தனர்.இந்த பிரச்னை குறித்து, துணை தலைவர் கலெக்டர் பழனியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். மனு கொடுத்து பல நாட்களாகியும், சீட் ஒதுக்கும் பிரச்னையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் மோதல், சீட் ஒதுக்கும் பிரச்னை, நகராட்சி திட்ட பணிகளை 13 கவுன்சிலர்களுக்கு ஒதுக்கும் போது, நகர்மன்ற தலைவருக்கு அமைச்சர் தரப்பிலிருந்து நெருக்கடி, ஒப்பந்த பணிகளை எந்த கவுன்சிலர்களுக்கு வழங்குவது என்பது போன்ற இடியாப்ப சிக்கலால் நிர்வாகத்தை செம்மையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாமல் திணறி வருவதால், கூட்டம் நடத்தினால் சிக்கல் ஏற்படும் என்பதால் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்க வேண்டிய நகர் மன்ற கூட்டம் நடைபெறவில்லை.இரண்டு மாதங்களாக கூட்டம் நடைபெறாமல் போனதால், 33 வார்டுகளில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை கோரிக்கை குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி, தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வளர்ச்சி திட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை