உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க.,சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல் : நகராட்சிகளில் தொண்டர்கள் கூட்டம்

அ.தி.மு.க.,சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல் : நகராட்சிகளில் தொண்டர்கள் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகராட்சிகளில் அ.தி.மு.க., சார்பில் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்வர் என கட்சி தலைமை அறிவித்தது. நேற்று பகல் 12.15 மணிக்கு விழுப்புரம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன், அமைச்சர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகளுடன் வந்தார்.

பகல் 12.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். அமைச்சர் சண்முகம் முன்மொழிந்தார். வேட்பாளர் பாஸ்கருக்கு மாற்று வேட்பாளராக அ.தி.மு.க., மாணவரணி செங்குட்டுவன் மனு தாக்கல் செய்தார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், இளைஞரணி பசுபதி, இலக்கிய அணி பாஸ்கரன், பேரவை பொருளாளர் ரகுநாதன் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும் அ.தி.மு.க., சார்பில் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 33 பேர் மனு தாக்கல் செய்தனர்.

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க.,வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் 33 வார்டுகளுக்கும் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். திண்டிவனம் ஜெயபுரம் ரவுண்டானா அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. கார்கள், ஆட்டோக்கள் உள்பட 250க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசன் திறந்த வேனில் ஓட்டு சேகரித்தபடி சென்றார். சிறுபான்மை பிரிவு அப்பாஸ்மந்திரி, ஜெ.,பேரவை தம்பி ஏழுமலை, ஹெரீப், நகர நிர்வாகிகள் மணிமாறன், பாலசந்தர், ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் மன்றம் சுரேஷ், மகளிரணி மீனா, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மரக்காணம் சாலை, மேம்பாலம், நேரு வீதி வழியாக சென்ற ஊர்வலத்தில் வழி நெடுகிலும் முக்கிய பிரமுகர்கள் வேட்பாளர் வெங்கடேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பகல் 12.20 மணிக்கு துவங்கிய ஊர்வலம் 1.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. மதியம் 1.45 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அண்ணாதுரையிடம் மனு தாக்கல் செய்தார். பின்னர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 33 வேட்பாளர்களும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்தனர்.

அமைச்சர் சண்முகம், எம்.எல்.ஏ., அரிதாஸ், கவுன்சிலர் சேகர், வழக்கறிஞர் தீனதயாளன், டாக்டர் கணேசன், சேர்மன் வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர் சாவித்திரி வெங்கடேசன் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி சேர்மன் வேட்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் 21 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி மந்தை வெளியிலிருந்து காந்தி ரோடு, சேலம் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல் செய்தனர்.

எம்.எல்.ஏ.,க்கள் மோகன், அழகுவேல்பாபு முன்னிலை வகித்தனர். சேர்மன் வேட்பாளர் பாலகிருஷ்ணன் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் மனு தாக்கல் செய்தார். நகர செயலாளர் பாபு, மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, எம்.ஜி.ஆர்., மன்றம் தங்கபாண்டியன், இளைஞரணி குபேந்திரன், ஜெ., பேரவை ஞானவேல், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், நகர நிர்வாகிகள் குட்டி, கோபி, வேணு கோபால், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும் 21 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க., சார்பில் நகர் மன்ற சேர்மன் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்காக நேற்று மனு தாக்கல் செய்ததால் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இத்துடன் முடியவில்லை மனு தாக்கல் படலம், அடுத்தடுத்து தி.மு.க.,- தே.மு.தி.க., கட்சியினரும் பெரும் படையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பின்றி (கம்யூ., கட்சிகளை போல்) தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தால், பொதுமக்களிடம் கூடுதல் ஓட்டுகளை பெறலாம். அரசியல் கட்சியினர் கவனத்தில் கொள்வார்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை