| ADDED : ஆக 04, 2024 11:25 PM
விக்கிரவாண்டி: விழுப்புரம் புறவழிச்சாலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட எல்லீஸ்சத்திரம் ரோடு மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, தேவையான இடங்களில் மேம்பாலம் அமைத்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரம் ரோடு சந்திப்பில் 27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் பணி துவங்கியது.பணியை திருவண்ணாமலையைச் சேர்ந்த அப்பு கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களிடம் துணை காண்ட்ராக்ட் அடிப்படையில் வேறு நிறுவனத்திற்கு பணி ஒப்பந்தம் போடப்பட்டது.அந்த துணை நிறுவனத்தார் முதல் கட்டமாக வாகனங்கள் தடையின்றி செல்ல சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். அதனைத் தொடர்ந்து, மேம்பாலம் அமைக்க தேவையான கிராவல் மண் சேகரிக்கும் பணியினால் தொய்வு ஏற்பட்டு பணி மந்தகதியில் நடந்தது.திருச்சி - சென்னை சாலையில் ஒரு பகுதி மேம்பாலம் அமைக்கப்பட்டு, மண் கொட்டும் பணி நடைபெற துவங்கிய நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும், துணை ஒப்பந்தத்தில் போடப்பட்ட தொகை குறைவு காரணமாகவும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டார்.ஏற்கனவே நகாய் நிறுவனத்தார், கடந்த ஜூலை மாதத்திற்குள் பணியை முடிக்க கெடு விதித்திருந்தது. ஆனால், பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.இதையடுத்து கடந்த வாரம் புதிதாக சேலத்தைச் சேர்ந்த வி.எம்.ஐ., கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனத்தினர் துணை ஒப்பந்தம் போடப்பட்டு பணியை துவங்கியுள்ளனர்.தற்போது, சாலையின் கிழக்கு பகுதியில் சென்னை - திருச்சி சாலையில் மேம்பாலம் அமைக்க கான்கிரீட் போட தேவையான பணிகள் முடிவடைந்தும், மேம்பாலத்திற்கு மண் கொட்டி சாலையை உயர்த்த, சுற்றுச்சுவர் அமைத்து மண் கொட்ட தயாராகி வருகின்றனர்.விழுப்புரம் நகாய் இயக்குனர் வரதராஜன் மேம்பால பணியை பார்வையிட்டு, வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணியை முடித்து தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.அதற்குள் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்தால் அதன் காரணமாகவும் பணிகள் தடைபட வாய்ப்புள்ளது.பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து எளிதாக செல்லும் வகையில் இம்முறை பணியை எடுத்துள்ள துணை ஒப்பந்ததாரர் கிடப்பில் போடமல் விரைந்து முடித்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.