உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருக்கோவிலுார் நகராட்சி, 20 ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்பு...  நிறைவேற்றப்படுமா? விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அரசின் நடவடிக்கை தேவை

திருக்கோவிலுார் நகராட்சி, 20 ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்பு...  நிறைவேற்றப்படுமா? விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அரசின் நடவடிக்கை தேவை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் நகராட்சி மற்றும் 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற தொகுதி மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக 75 சதவீத ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்திலும், 25 சதவீதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலுார் தொகுதியை தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் தேர்தல் பணிகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் மூலம் இயங்குகிறது. இது ஒரு புறம் இருக்க தொகுதி தேர்தல் செலவுகளை விழுப்புரம் கலெக்டர் மேற்பார்வையில் கண்டாச்சிபுரம் தாசில்தார் மேற்கொள்ளும் நிலையில், செலவினங்களை திருக்கோவிலுார் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்க வேண்டி இருக்கிறது. இதில் பணம் பெறுவதில் வருவாய்த் துறை ஊழியர்கள் பெரும் சிக்கலை சந்தித்து குழப்பத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகளின் நிலை இது என்றால், மக்களின் அவலம் சொல்லி மாளாது. திருக்கோவிலுாரில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் இருக்கும் மணம்பூண்டி, அரகண்டநல்லுார் என அருகாமையில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சப் கலெக்டர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், எஸ்.பி., அலுவலகம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக பணிகளுக்கு 35 கி.மீ., துாரத்தில் இருக்கும் விழுப்புரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஊராட்சிகளின் வளர்ச்சி பணி திட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 20 ஊராட்சிகளில் மிக மோசமான நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அழுத்தம் காரணமாக ரிஷிவந்தியம் உள்ளிட்ட தொகுதிகளுக்கே நிதி ஒடுக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட 20 ஊராட்சி தலைவர்கள் தங்கள் ஊராட்சியை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். இது குறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்த கோரிக்கை மனு தொகுதி மக்கள் சார்பில் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்துடன் திருவெண்ணைநல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்கள் சேர்க்கப்படுவதால் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் அலையும் அவலத்திற்கு தீர்வு கிடைப்பதுடன், அரசின் திட்டங்களும் விரைவாக சென்றடையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். தி.மு.க., அரசு அமைந்து 4 ஆண்டுகள் கடந்து, விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலிலும் மக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இப்பிரச்னை எதிர்வரும் தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.

பொது நிதி ஊராட்சிக்கு

கிடைப்பதில்லை

திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள விளந்தை ஊராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. இதனால், திருக்கோவிலுார் ஒன்றிய நிர்வாகம் திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட 20 ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை. எங்கள் ஊராட்சியில் சொந்தமாக ரேஷன் கடை இல்லை. கிராமங்களை இணைக்கும் உள் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. வடிகால் வாய்க்கால் கட்ட முடியவில்லை. அத்தியாவசிய பணிகளுக்கு பொது நிதி எங்கள் ஊராட்சிக்கு கிடைப்பதில்லை. காரணம் தொகுதி வேறு, மாவட்டம் வேறு. பொன்முடி எம்.எல்.ஏ., முயற்சியால் ஒரு சில பணிகள் மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். -பூமா அய்யனார் ஊராட்சி தலைவர், விளந்தை.

சிறப்பு திட்டங்களை

செயல்படுத்துவதில் சிக்கல்

தொகுதி ஒரு மாவட்டத்திலும், ஊராட்சி நிர்வாகம் மற்றொரு மாவட்டத்திலும் இடம்பெறுவதால் ஊராட்சிகளுக்கான சிறப்பு திட் டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், ஊராட்சிகளுக்கான அடிப்படை வசதிகள்கூட நிறைவேற்ற முடிவதில்லை. கடந்த ஆட்சியில் நடந்த தவறை சீரமைக்க வேண்டும் என தொகுதியின் வ ளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொன்முடியிடம் இது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாந்திதுரைசாமி ஊ ராட்சி தலைவர், குலதீபமங்கலம்.

கிராமசபை கூட்டத்தில்

தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்

திருக்கோவிலுார் யூனியனில் உள்ள 60 ஊராட்சிகளில், 20 ஊராட்சிகள் திருக்கோவிலூர் தொகுதியில் இடம் பெறுகிறது. எனவே ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட 40 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. அத்துடன் இங்கிருந்து கள்ளக்குறிச்சி 45 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஆனால் விழுப்புரம் 35 கி.மீ., துாரத்தில் உள்ளது. எங்கள் ஊராட்சியை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர், கழுமரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை