| ADDED : ஜூலை 12, 2024 03:55 AM
மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் பொதுவாக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் அருகிலுள்ள மரங்களால் காற்றடிக்கும் போதோ, மழை பெய்யும் போதோ வயர்களில் உராய்வு ஏற்பட்டு மின் தடை ஏற்படும். மேலும் வேறு அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.இதற்காக மாவட்டத்தில் நகர் கிராமப் பகுதிகளில் மின்துறையினரால் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணியின் போது மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களின் மின் வயர்களில் சிக்கி இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி விடுவர்.பெரும்பாலும் குடியிருப்புப் பகுதி, மெயின் ரோடுகளில் இவ்வாறு வெட்டப்படும் மரக்கிளைகள் அப்படியே போடப்பட்டு விடுகின்றனர். மெயின் ரோட்டில் போடப்படும் மரக்கிளைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.இரவில் வருகின்ற வாகனங்களுக்கு ரோட்டில் கிடக்கும் மரக்கிளைகள் தெரியாததால் விபத்தில் சிக்குகின்றது. மேலும் தொடர்ந்து அதே இடத்தில் இந்த கழிவுகள் நீண்ட நாட்கள் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்களின் இருப்பிடமாகவும் மாற்றிக் கொள்கிறது. இவைகள் வெளியேறி ரோட்டில், குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவ்வாறு வெட்டப்படும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் பராமரிப்புக்காக வெட்டிய மரக்கிளகளை அகற்ற உள்ளாட்சியில் திட்டம் உள்ளது. அவற்றை ஏலம் விடவும் செய்வர். இதனால் மின்துறையால் மரங்களை அகற்ற இயலாது. ஆனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் அகற்றும். நாங்கள் வெட்டிய பின் உள்ளாட்சிகளில் தகவல் தெரிவிக்க மின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம், என்றார்.