| ADDED : மே 02, 2024 04:49 AM
விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும், பஜாரில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகர் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள், குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவதற்காக மெயின் பஜாருக்கு வந்து செல்கின்றனர். ஊரகப்பகுதிகளில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் பலரும் மெயின் பஜாருக்கு வந்து வியாபாரத்துக்கு தேவையானவற்றை வாங்கி செல்கின்றனர். இப்படி வருபவர்கள் தேசபந்து மைதானத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.ஆனால் தற்போது மெயின் பஜாரில் கடைகள் முன்பே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகராட்சி மூலம் மெயின் பஜார் வியாபாரிகள் ஒத்துழைப்புடன் ரோட்டின் இருபுறமும் கயிறு கட்டி டூவீலரை நிறுத்துவதற்கு போலீசார் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த முறையும் தற்போது கடைப்பிடிக்கப்படுவதில்லை. தேசபந்து மைதானத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்ல மக்கள் சுணக்கம் காட்டி மெயின் பஜாரில் கடைகள் முன்பே டூவீலரை நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் என்பதால் வியாபாரிகளும் மறுப்பு தெரிவிப்பதில்லை.இது போன்று செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மெயின் பஜார் என்றாலே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலில் யாரேனும் மயங்கி விழுந்தால் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ, ஆம்புலன்ஸ் வருவதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டாலும் வாடிக்கையாளர்களும் முன்வர வேண்டும். கடை வியாபாரம் பாதித்து விடக்கூடாது என்பதற்காக வாடிக்கையாளர்கள் நிறுத்தும் வாகனங்களை வியாபாரிகள் கண்டு கொள்வதில்லை.மெயின் பஜார் ரோட்டின் இருபுறமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் இவ்வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் பஜார் வழியாக பகல் நேரத்தில் நடந்து செல்லும் வயதானோர், குழந்தைகளை அழைத்து செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் மெயின் பஜாரில் கயிற்றை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள், ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.