| ADDED : ஆக 14, 2024 12:34 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்து அனுப்பவதற்கு புதிய சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 2 நகர, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 114 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நகர, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது.தற்போது நகர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள், வயதானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கான மருந்துகள், பொருட்கள் விருதுநகர் சேமிப்பு கிடங்கில் இருந்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கிடங்கிற்கு மொத்தமாக வரும் பொருட்களை ஒரு பகுதியில் உள்ள நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களுக்கு இன்று அனுப்பினால், மற்றொரு பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு நாளை என முடிந்த வரையில் பொருட்கள் தேங்காமல் அனுப்பி வைக்கின்றனர்.ஆனால் மருந்துகள் வருகை அதிகரிக்கும் போது பொருட்களை சேர்த்து அனுப்புவதற்காக ஒரிரு நாள்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டியுள்ளது. இது போன்ற சமயங்களில் கூடுதல் சேமிப்பு இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் பணியாளர்கள் பொருட்கள் சேதமாகி விடாமல் இருக்க பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகரில் மருந்துகளை சேமிக்க கூடுதலாக புதிய சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.