| ADDED : ஜூலை 23, 2024 04:41 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் மட்டுமே முதல் முறையாக உள்நோயாளிகளுக்கான இரவு உணவாக வாரத்தில் மூன்று நாட்கள் சப்பாத்தி, குருமா கொடுக்கப்படுகிறது என டீன் சீதாலட்சுமி தெரிவித்தார்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிக்கு மட்டும் இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் இரவில் ஆய்வு செய்த போது பல உள்நோயாளிகள் தங்களுக்கும் சப்பாத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை உணவு கட்டுப்பாடுக்குழு கூட்டத்தில் ஏற்கப்பட்டது.இதற்காக மருத்துவமனை பராமரிப்பு நிதியில் இருந்து சப்பாத்தி மேக்கர் மிஷின் வாங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக டெண்டர் விடப்பட்டது. இதில் கோவையில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.97 லட்சத்தில் மேக்கர் மிஷின் வாங்கப்பட்டது. அதன் மூலம் தற்போது அனைத்து உள்நோயாளிகளுக்கும் இரவு உணவாக வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சப்பாத்தி, குருமா வழங்கப்படுகிறது.மேலும் குழந்தைகளுக்கு காலையில் தோசை, இரவு சப்பாத்தி வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் மட்டுமே அனைத்து உள்நோயாளிகளுக்கும் இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படுகிறது. இதற்கு உறுதுணையாக சமையல் மாஸ்டர் சந்தானம் உள்ளார் என டீன் சீதாலட்சுமி தெரிவித்தார்.